கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம்: செந்தில் பாலாஜி உறுதி | senthil balaji about karur issue

Spread the love

கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று (அக்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துரை.செந்தமிழ்செல்வன், பொறுப்பேற்கும் நிகழ்வையொட்டி, காந்திபுரத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று (அக்.5) நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “செந்தமிழ்செல்வன் முறைப்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பளாராக பொறுப்பை ஏற்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கரூரில் நடந்த தவெக பிரச்சார விவகாரம் தொடர்பாக முன்னரே விரிவாக பேசி விட்டேன். இனி, விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த பிறகு அது குறித்து பேசினால் சரியாக இருக்கும். எனவே, அது தொடர்பான கேள்விகளை தவிர்க்கலாம். அந்த விவகாரம் தொடர்பாக வரும் புதிய வீடியோக்கள் உள்ளிட்டவை குறித்து ஆணையத்தினர் விசாரிப்பர். தமிழக அரசு இதனை வைத்து அரசியல் செய்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசின் சார்பில், முழு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் மீது குற்றச்சாட்டு கேள்விகளை எழுப்பும் செய்தியாளர்கள், ஏன் 7 மணி நேரம் தாமதமாக தவெக தலைவர் விஜய் வந்தார்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வாகனத்துக்குள் சென்று விட்டார்.

மதியம் 12 மணி என அறிவித்துவிட்டு, இரவு 7 மணிக்கு தாமதமாக வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டிருந்த பிரச்சாரத்தை முன்கூட்டியே ஏன் நடத்த வேண்டும், அதற்கு என்ன காரணம் என அவரிடம் கேட்க வேண்டும். என்னிடத்தில் ஒரு கேள்வி கேட்டால் எதிர்புறத்திலும் கேள்வி கேட்க வேண்டும். கரூர் விவகாரம் தொடர்பாக தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு அது குறித்து பேசுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *