நாகை: நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழையாலும், புயல் சின்னம் உருவாகும் என எச்சரிக்கப் பட்டுள்ளதாலும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக இன்று கடலுக்குச் செல்லவில்லை.
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முழுவதும் மழை பெய்தது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் நிலை இருப்பதால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அறிவித்திருந்தது.
இதன்பேரில் கடலுக்குச் சென்றவர்களில் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். கரையில் உள்ள மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போதிய மீன் வரத்து இன்றி நாகை துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.
நாகை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நாகூர் வள்ளியம்மை நகர், அம்பேத்கர் நகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது.
நாகை- நாகூர் கிழக்குக் கடற்கரை சாலையில் பெய்த பலத்த மழையால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன. நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய நாகூர் சாலை உட்பட ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நிறைவு பெறாமல் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதில் கழிவுநீரும் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூண்டியில் 84 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், நாகையில் 82.02, திருக்குவளை 63.08, வேளாங்கண்ணி 47.06, தலைஞாயிறு 45.20, வேதாரண்யம் 42.02, கோடியக்கரை 40.08 என்ற அளவில் மழை பதிவாகியது.
இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், அக்.21-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் புதுச்சேரி மீன்வளத் துறை அறிவித்துள்ளது.