சேலம்: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவின் 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 123.20 அடி அளவுக்கு நீர் உள்ளது. எனவே, அந்த அணையில் இருந்து விநாடிக்கு 50,801 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் தற்போது 18.49 டிஎம்சி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. எனவே, கபினி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 17,375 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரினால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலையில் 57,409 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் 64,033 கனஅடியாகவும், மாலையில் 76,794 கனஅடியாக மேலும் அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியில் இருந்து, இன்று காலையில் 75.05 அடியாக உயர்ந்தது. மாலையில் நீர் மட்டம் மேலும் அதிகரித்து, 77.36 அடியை கடந்தது. அணையின் நீர் இருப்பு 31.77 டிஎம்சி-ஆக இருந்த நிலையில், இன்று 39.37 டிஎம்சி-ஆக அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர் வரத்து அதிகமாக இருப்பதால், விரைவில் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியது: “கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் 103.35 அடி உயரத்துக்கு நீர் இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ல் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதனை காரணமாக்கி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா விடுவிக்கவில்லை. கடந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு அதிகபட்ச நீர் வரத்து 18,058 கனஅடி ( ஜூலை 30-ல்) மட்டுமே, அதுவும் ஓரிரு நாட்களுக்கு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. எனவே, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, அவற்றின் உபரி நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால், ஓரிரு வாரங்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும். எனவே, டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே நீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.