கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: வேல்முருகன் | Cauvery Issue: Case should be Filed against Karnataka Govt on Supreme Court- Velmurugan

1280415.jpg
Spread the love

சென்னை: காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கடந்த ஜூன் 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.

கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழ்நாட்டிற்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், நீர் திறந்து விடுவதற்கான கர்நாடக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் பின்னர், கடந்த 11ம் தேதி, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்து விடுவதில்லை என சித்தராமையா அறிவித்தார். மேலும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.

நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது. நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது ஆணவப்போக்கு. கண்டனத்துக்குரியது.

வறட்சி காலம், மற்றும் மழைக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே இவ்விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தி, தமிழகத்துக்கு நீரைத் திறக்க கர்நாடக மாநிலத்துக்கு அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து கன்னட இனவெறி போக்குடனும், தமிழர் விரோதப் போக்குடனும் செயல்பட்டு வரும் கர்நாட அரசின் நடவடிக்கை இறையாண்மைக்கு எதிரானது. எனவே, காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.” எனக் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *