சென்னை: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய அரசியலில் உறுதியும் தொலைநோக்கும் மிகுந்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கர்நாடகத்தின் முதல்வராக கிருஷ்ணா, அம்மாநிலத்தைக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பாதையில் செலுத்தினார். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உலகளவில் நம் நாட்டின் நிலையை வலுப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் முற்போக்கான ஆட்சிமுறை வழியே நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பொதுமக்களின் நலனுக்காக ஆற்றிய சேவை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியிலும், தகவல் தொடர்புத் துறையிலும் மகத்தான சாதனைகளை புரிந்தவர். தொழில் வளர்ச்சியை பெருக்கியவர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பெரும் பங்காற்றியவர். எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.