குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும்போது, அந்த எடையைத் தாங்கும் வலிமை இல்லாததால் கர்ப்பப்பை வாய் முன்கூட்டியே திறக்க ஆரம்பித்து கருச்சிதைவு (Spontaneous Miscarriage) ஏற்படுகிறது. கர்ப்பத்தின் 12-வது வாரத்தில் செய்யப்படும் ஸ்கேனில் கர்ப்பப்பை வாயின் நீளம் (Cervical Length) அளவிடப்படும். அந்த நீளமானது 3 முதல் 4 செ.மீ வரை இருக்க வேண்டும். இதுதான் இயல்பானது.
ஒருவேளை கர்ப்பப்பை வாயின் நீளம் 3 செ.மீ-க்கும் குறைவாக இருந்தால், அந்தக் கர்ப்பிணியின் ஆரோக்கியம், கர்ப்பத்தின் 16 மற்றும் 20-வது வாரங்களில் மீண்டும் கண்காணிக்கப்படும். நீளம் தொடர்ந்து குறைந்தால், கர்ப்பப்பையின் வாயில் தையல் போடப்படும். முந்தைய பிரசவங்களில் 12 முதல் 14 வாரங்களுக்குப் பிறகு வலி தெரியாமல் திடீரென கருச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம். இதை ‘பெயின்லெஸ் செர்வைகல் டைலேஷன்’ (Painless Cervical Dilation) என்று சொல்வோம். இந்த நிலையை எதிர்கொண்ட பெண்களுக்கு, அடுத்த கர்ப்பத்தின் போது இந்தத் தையல் அவசியமாகிறது. கர்ப்பப்பை வாய்க்குத் தையல் போடுவது என்பது முக்கியமானதொரு சிகிச்சை முறை.

எல்லாப் பெண்களுக்கும் தையல்தான் போட வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு புரொஜெஸ்ட்ரோன் (Progesterone) மாத்திரைகள் கொடுப்போம். தவிர, அந்தப் பெண்ணைப் போதுமான ஓய்வில் இருக்கச் செய்வதன் மூலமாகவும் இதைக் கையாள முடியும். தையல் போடப்பட்டால், ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
போடப்பட்ட தையலானது, கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் (36-வது வாரத்தில்) பிரசவத்திற்குச் சற்று முன்னதாகப் பிரிக்கப்படும். தையல் போட்ட பெண்களுக்குக் கண்டிப்பாக சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை; அவர்களுக்குச் சாதாரண பிரசவமும் (Normal Delivery) சாத்தியமே.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.