திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908- என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908’ என்று சு. வெங்கடேசன் எம்.பி. புகழ்ந்துள்ளார்.
1908ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் இந்த நூல் விரிவாக ஆராயும் வகையில் அமைந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு 21 மொழிகளில் எட்டு கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வுப் புத்தகங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுவோருக்கு ஒரு பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.