கலங்கரை விளக்கம் – திருமயிலை நோக்கி மெட்ரோ சுரங்க பாதை பணி தீவிரம் | Light House – Metro Tunnel Work Towards Mylapore on Full Swing

1358075.jpg
Spread the love

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலையை நோக்கி சுரங்கப் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடும் ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரும் செப்டம்பரில் திருமயிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப் படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘ஃபிளமிங்கோ’, 2023ம் ஆண்டு செப்-1ம் தேதி பணியை தொடங்கியது. 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘ஈகில்’ தனது பணியை 2024ம் ஆண்டு ஜன.18ம் தேதி தொடங்கியது. இந்த இயந்திரங்கள் அடுத்தடுத்து திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட் கிளப்பை அடையவுள்ளது.

இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை நோக்கி வரை சுரங்கப் பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. கலங்கரை விளக்கம் – திருமயிலை வரை 1.96 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைப்பது முதல் இலக்காகும். இந்தப் பணிகளில் ஃபிளமிங்கோ, ஈகில் ஆகிய சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றன.

​​ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம், கச்சேரி சாலை நிலையம் வழியாக செப்டம்பரில் திருமயிலையை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஈகிள் சுரங்கம் தோண்டும் இயந்திரம் தற்போது கச்சேரி சாலை நிலையத்துக்குள் நுழைய காத்திருக்கிறது. ஃபிளமிங்கோ இயந்திரத்தின் பயணம் மிகவும் கடினமான இருந்தது.

மண்ணின் தரம் காரணமாக சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றான கட்டர் ஹெட், பிரச்சினைகளை சந்தித்தது. தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, தற்போது வரை, 1.3 கி.மீ. சுரங்கப் பாதையும், ஈகிள் சுரங்கம் தோண்டு இயந்திரம் மூலமாக, 1.2 கி.மீ. வரை சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *