"கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும் கட்டுப்படாமல் இயங்கியிருக்கிறேன்" – திருமாவளவன் பேச்சு

Spread the love

மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது, “வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தேர்தல் அரசியல் கூட்டணிக்காக நான் எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். திமுக-வை நான் உயர்த்திப் பிடிப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். திமுக மீது எங்களுக்கும் விமர்சனம் உண்டு.

விழாவில்

தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு உண்மையாகவும் அதே நேரம் ஏற்ற கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும் இயக்கம் வலிமையோடு செயல்படுவதற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எந்தப் பின்புலமும் இல்லாமல் மதுரையில் 20 பேரைக் கொண்டு தொடங்கிய அரசியல் வாழ்க்கை, இன்று லட்சக்கணக்கானவர்கள் திரளும் கூட்டமாக 30 ஆண்டுகளில் பரிணமித்திருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபோது நான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததை சிலர் இன்றும் விமர்சிப்பதைப் பார்க்கிறேன். வேங்கைவயல் உள்ளிட்ட பல தலித் மக்கள் பிரச்னைகளின்போது எனக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தது உண்டு. வேங்கைவயல் சம்பவம் நடந்த இரண்டாம் நாளே போராட்டம் அறிவித்து நடத்தினேன். பத்துக்கும் மேற்பட்ட முறை முதலமைச்சர், தலைமைச் செயலாளரிடம் பேசினேன், கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்களை மறந்து தனி நபராக என்னுடைய நலன் குறித்து சிந்தித்தது இல்லை, அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை.

இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எங்களைப் போல் போராடியவர்கள் யாருமில்லை. மதுரையில் நான் அரசைக் கண்டித்துப்பேசியது தொடர்பாக தமிழக முதலமைச்சரே ‘ஏன் இப்படி பொதுவெளியில் அரசை குற்றம்சாட்டி பேசுகிறீர்கள்?’ என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

விழாவில்

கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும்கூட கட்டுப்பட்டு இருக்காமல், அதிமுக தலைவர்களோடு இயங்கியிருக்கிறேன். பெரியார் பிற்படுத்தப்பட்டோர் கட்சிகளின் தலைவராகத்தான் இருந்தார். விசிக, அம்பேத்கருடன் பெரியாரையும் இணைத்து படம் ஒட்டியதால்தான் அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஆதரித்தனர்.

அம்பேத்கரை சாதியவாதியாக கம்யூனிஸ்ட்டுகள் பார்த்த காலமுண்டு. அந்த காலக் கட்டத்தில் அம்பேத்கரை தோழர்கள் கடுமையால விமர்சிப்பார்கள். அம்பேத்கர் இயக்கங்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்தவன் நான்.

மதுரையை சனாதன மையமாக மாற்றப் பார்க்கிறார்கள். சாதி சங்கங்களை அணுகி சாதி உணர்வுகளைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள். ஜனநாயக உணர்வைச் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல், நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலைப் பற்றி பேசுவேன். சீட் எத்தனை பெறுகிறேன் என்பது என் பிரச்னையல்ல, சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமரப் போவதில்லை.

மதுரை விழாவில்

பதவி எனக்குப் பெரிதல்ல, 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாகத் தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா? இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணமே பதவி ஆசை இல்லாததுதான்.

பெரியாரை பிராமண கடப்பாறையைக் கொண்டு இடிப்போம் என்று வெளிப்படையாக சொல்லும் நிலை வந்திருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகிறது. சகோதரத்துவத்தை தகர்க்கப் பார்க்கிறார்கள். உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிர்ப்பது தான் உண்மையான தமிழ் தேசியம்.

இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் தான் இருக்கவேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிர்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *