கலைமகள் சபா சொத்துக்களை உறுப்பினர்களுக்கு பிரித்து தர ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி வழக்கு | case seeking appointment of a retired judge to distribute the assets of the Kalaimagal Sabha to the members

1309393.jpg
Spread the love

சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அதன் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையில் உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசின் வணிக வரித்துறை செயலருக்கு கடந்த 2021 நவம்பரில் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், ‘உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்போது 60 முதல் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலங்களை உறுப்பினர்களின் பெயர்களில் பங்கிட்டு வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதன், இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி. மோகனகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி, “கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ளது. இந்தச் சூழலில் பதிவுத்துறை அதிகாரியை ரிசீவராக நியமிப்பது என்பது பொருத்தமாக இருக்காது. எனவே, இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை ரிசீவராக நியமித்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், “இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *