வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
வரலாற்றை வடித்த பண்ணைபுரத்துப் பாட்டு
கேரளாவில் 1957-ஆம் ஆண்டு இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யூனிச அரசாங்கம் அமைந்தது.
இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் “பாவலர்’ வரதராஜன். பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் (இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த சகோதரர்), தனது கணீரென்ற குரலால் கம்யூனிசக் கொள்கைகளைத் தமிழக-கேரள எல்லைகளில் பாடல்களாகப் பரப்பினார். உழைக்கும் வர்க்கத்தின் இதயங்களில் இவரது பாடல்கள் ஏற்படுத்திய எழுச்சி, அந்தத் தேர்தல் வெற்றியில் பெரும் பங்காற்றியது.

நாற்காலியைத் தாங்கிய கவிதை வரிகள்
தமிழக அரசியலில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்ததற்குத் திரைப்படப் பாடல்களே அச்சாணியாக இருந்தன. குறிப்பாக, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் சாமானிய மக்களின் வாழ்வியலையும், உரிமைகளையும் பேசின.
பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எம்.ஜி.ஆரை ஒரு மக்கள் தலைவராக மக்களிடம் கொண்டு சேர்த்தன. தனது அரசியல் வளர்ச்சியில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர் பலமுறை நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.