மதுரை: மதுரையில் பொறியியல் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில், அவர் பதவி விலகவேண்டும் என, மூட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் கல்வி கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் நடந்த மாநில பேச்சுபோட்டிக்கான பரிசு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்என். ரவி, மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் செந்தாமரைகண்ணன், தலைவர் பெரியசாமி ராஜா ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீராமரின் பக்தரான கம்பரை போற்றும் வகையில் நானும் சொல்கிறேன் நீங்களும் சொல்லுங்கள் என மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல வைத்து தானும் மூன்று முறை ஜெய் ஸ்ரீ ராம் என ஆளுநர் முழக்கமிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மாணவர்களையும் கோஷம் எழுப்ப வலியுறுத்தியது கடும் கண்டனத்திற்குரியது. அனைத்து சமூக மக்களும் பயிலக்கூடிய ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் பொறுப்பு மிக்க பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபர் இவ்வாறு மதம் சார்ந்து பேசுவது என்பது மக்களிடையே குறிப்பாக மாணவர்கள் இடையே மதவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் தூண்டுவதாக உள்ளது. கல்விச்சூழலை பாதிப்பதாக அது அமைக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் படி நடந்து கொள்ள வேண்டிய ஆளுநரே, சட்டத்திற்கு முரணாக செயல்படுவது ஏற்புடையதல்ல. ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். கல்வி வளாகங்களை காவி மயமாக்கிடும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலகவேண்டும். ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சு மாணவர்கள் ஆசிரியர்கள் , கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.