தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நவ. 25-க்குள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.