மதுரை: கல்லூரி படிக்க, வேலை கிடைக்க உதவியைத் தொடர்ந்து திருமணத்துக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழக முதல்வருக்கு மதுரையைச் சேர்ந்த பெண் நன்றியை தெரிவித்து நெகிழ்ந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சோபனா கல்லூரி படிக்கவிருந்தபோது, ஓட்டுநரான தந்தை மனோகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனது கல்லூரிக் கல்வி கானல் நீர் ஆகிவிடுமோ என, நினைத்து கல்லூரி படிக்க உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை சோபனா எழுதினார்.
முதல்வரின் முயற்சியால் அரசுக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிப்பை முடித்தார். பிறகு மதுரை தொழிலாளர் நலத்துறையின் அலுவலகத்தில் அரசுப் பணிக்கு தேர்வாகி தற்போது அங்கு பணிபுரிகிறார். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வீரமணி கார்த்திக் என்பவருடன் சோபானாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயமானது.சோபனா தனது திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரில் சென்று வழங்கி அழைத்துள்ளார்.
சோபனா – வீரமணி கார்த்திக் திருமணம் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோயிலில் இன்று நடந்தது. இத்தம்பதியருக்கு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சர் பி.மூர்த்தி அந்த திருமணத்தில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் முதல்வரின் திருமண வாழ்த்து மடலை மணமக்களிடம் நேரில் வழங்கி அவர்களை வாழ்த்தியுள்ளார்.
இது மணமக்கள் வீட்டாருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சோபனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கு கல்லூரி படிப்புக்கு உதவி செய்து, வேலையும் கிடைக்க உதவிய ‘அப்பா’ முதல்வர் தற்போது எனது திருமணத்துக்கும் வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இதற்காக தமிழக முதல்வருக்கும், அமைச் சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.