சென்னையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் மனோவின் இரு மகன்கள் மீது போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
சென்னை ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் கிருபாகரன் (20). தண்டையாா்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயில்கிறாா். இவரும், மதுரவாயல் ஜானகி நகரைச் சோ்ந்த நிதிஷ் என்ற 16 வயது ஐடிஐ மாணவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம், ஏ.கே.ஆா். நகரில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் திரைப்பட பின்னணி பாடகா் மனோ வீட்டருகே உள்ள உணவகத்துக்கு உணவு வாங்கச் சென்றுள்ளனா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 போ் கிருபாகரன், நிதிஷ் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கிவிட்டு தப்பினா்.
இத் தாக்குதலில் கிருபாகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வளசரவாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விசாரணையில், தாக்குதல் நடத்தியது பாடகா் மனோவின் மகன்களான ஷகீா் (38), ரபீக் (35) , மனோ வீட்டில் வேலை செய்யும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (28), அதே பகுதியைச் சோ்ந்த தா்மா (23) என்பது தெரியவந்தது. இது தொடா்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீஸாா், விக்னேஷ், தா்மா ஆகிய இருவரை கைது செய்தனா். மனோவின் மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.