அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலா தேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.
நிர்மலா தேவி குற்றவாளி
வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீஇந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் நேற்று (ஏப்.29) தீர்ப்பளித்தார். அப்போது நிர்மலா தேவி குற்றவாளி எனவும் அவருக்கான தண்டனை இன்று (ஏப்.30) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் இன்று நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வக்கீல்சுரேஷ் நெப்போலியன், “ நிரமலா தேவிக்கு தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர்.நிர்மா தேவியால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி பகவதி அம்மாள் குற்றவாளி நிர்மலா தேவிக்கான தண்டனை தீர்ப்பு விபரங்களை அறிவித்தார். அதில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிப்பதாக தெரிவித்தார். மேலும் சமுதாயத்துக்கு எதிரான வழக்கு இது. எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் இரக்கம் காண்பிப்பது சரியாக இருக்காது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனை விபரம்
நிர்மலா தேவிக்கு அளிக்கப்பட்ட தண்டனை விபரங்கள் குறித்து அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது:-
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மலா தேவி குற்றவாளி என்று அறிவித்து அவருக்கான தண்டனை விபரங்களை இன்று தெரிவித்தார். நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச்சட்டம் 370 (1), 370 (3), 5 (1)ஏ, 9, 67 ஆகிய 5 பிரிவுகளின்படி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.மொத்தமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டார்
அதேபோல், அபராதமாக மொத்தமாக ரூ.2.47 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்மலா தேவி சிறையில் இருந்து நாட்களை கழித்து, ஏக காலத்தில் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 2-வது மற்றும் 3-வது குற்றவாளிகளான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி க்கு எதிரான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதால் அவர்கள் விடுதலை ஆனார்கள். அவர்கள் விடுதலைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தீர்ப்பை அடுத்து குற்றவாளி நிர்மலாதேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.