சேலம்: “தமிழக அரசு கல்விக்காக ரூ.44 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. மத்திய அரசு பல கல்வித் திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிலையில், சமக்ர சிக்ஷா என்ற ஒரு திட்டத்துக்கான ரூ.2 ஆயிரம் கோடியை வழங்காததால், கல்வித் துறை நடத்த முடியவில்லை என தமிழக அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் மாணவர்கள் 3 மொழிகளை படிக்க வேண்டுமா என்பதுதான் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 52 லட்சமாக இருக்கிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து தற்போது 2010 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தனியார் பள்ளிகளை விரும்புகின்றனர். திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள், விசிக தலைவர் சேர்மனாக இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவற்றில் இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். ஆனால், இவர்கள் மைக் பிடித்து பேசும்போது, அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கை தான் வேண்டும் என்கின்றனர்.
அரசுப் பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்வாக இருக்கிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாய பாடம் கிடையாது. எனவே, பிரதமர் மோடி, அரசுப் பள்ளிகளில் 3 மொழிகள் வேண்டும் என்று விரும்புகிறார். தமிழ் பாடமொழியாகவும், ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு விருப்ப மொழி இருக்க வேண்டும் என்பது தான் பாஜக-வின் நோக்கம்.
இதை கேட்டால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு, இலவச சீருடை, காலணி கொடுக்கிறோம் என்று உதயநிதி கூறுகிறார். அவரது தாத்தா, அப்பா வீட்டுப் பணத்திலா இதை செய்கிறார். மக்களின் வரிப்பணத்தில் தானே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்கின்றனர்.
தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.44 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்குகிறது. இதேபோல், மத்திய அரசும் பல திட்டங்களில் கல்விக்கு நிதி வழங்குகிறது. அதில் ஒரு திட்டமான சமக்ர சிக்ஷாவுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடியை வழங்குகிறது. இதை வழங்காததால், தமிழகத்தில் கல்வித்துறை நடத்த முடியவில்லை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும். புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் திறக்கிறோம் என்று மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட தமிழக அரசு, இப்போது ரூ.2 ஆயிரம் கோடி தரவில்லை என்று பேசுகிறது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் வழங்குவோம். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். போலீஸ் உயரதிகாரிகள் வீடுகள், முகாம் அலுவலகங்களில் பணியாற்றும் பெண் போலீஸார், காவல் நிலைய பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை நடக்கவில்லை.
காசி, கும்பமேளாவுக்கு செல்கிறேன். அதன் பின்னர் அமித் ஷா-வின் தமிழக நிகழ்ச்சிகள் இருக்கின்றன. 26-ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் இருப்பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்டபடி, அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்துக்கு என்ன நேரத்தில் வர வேண்டும் என்று திமுகவினரை குறிப்பிடச் சொல்லுங்கள். ‘கெட்-அவுட் மோடி’ என்று உதயநிதி பேசியிருக்க வேண்டும். ஆனால், திமுக ஐடி விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் கெட்-அவுட் மோடி என டிரண்டிங் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்காத முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என்று எக்ஸ் தளத்தில் நாளை (பிப்.21) பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரெண்டிங் செய்தனர் என்பதை பார்த்துவிடுவோம். அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுகிறார் என உதயநிதி கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை ஊர்ந்து சென்றவர், பிரதமரை 29 பைசா மோடி என்பதுபோல, பல தலைவர்களை தரம் தாழ்ந்து பேசியவர் உதயநிதி.
கும்பமேளாவுக்கு இதுவரை 70 கோடி பேர் வந்துள்ளனர். தமிழகத்தின் மக்கள் தொகையை விட 9 மடங்கு மக்கள் கும்பமேளாவுக்கு வந்துள்ளனர். அங்கு வந்த பக்தர்களுக்காக, சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து கொடுத்துள்ளார். ஆனால், சென்னையில், விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 10 ஆயிரம் பேருக்கு, வசதி செய்து கொடுக்க தமிழக அரசால் முடியவில்லை” என்றார். இந்த பேட்டியின்போது, மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர்கள் கோபிநாத், சுரேஷ்பாபு உள்ளிட்ட பாஜக-வினர் உடனிருந்தனர்.