கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயர்களை நீக்குவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – ஐகோர்ட் கேள்வி | What is the govt position on removing caste names from educational institutions? – HC

1352440.jpg
Spread the love

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா என்றும், சாதிப் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.கார்த்திக் ஜெகநாத், இதுதொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “பள்ளிக் கூடங்களில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என அவற்றை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ள தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் கோருவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அதற்கு மேல் அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *