கல்வி நிறுவனங்கள், குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. எனவே அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச்சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சியின் அனுமதிக் கட்டணத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பொதுக் கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் திருத்த சட்டமசோதா, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான உரிமம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா, ஜிஎஸ்டி மசோதாக்கள், சென்னை பல்கலைக்கழகத்தை திருத்துவதற்கான மசோதா, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், கேளிக்கை வரி சட்டத்திருத்தம், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் காப்பங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாக்களை அறிமுகநிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதாக்கள் இன்று பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.