சென்னை: ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் உயரக் காரணம் திராவிட இயக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழா சென் னையில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதம், என்ஐஆர்எஃப் தரவரிசை என பல குறியீடுகள் அதற்கு சான்றாக உள்ளன.
ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் இன்று படித்து முன்னேறி, உலகம் முழுவதும் மிக உயர்ந்த இடத்தில் இருக்க காரணம் திராவிட இயக்கம். இந்த அடித்தளத்தில், உயர் கல்வியில் தலைசிறந்த தமிழகத்தை கட்டமைத்தவர் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாகவே, முதல்வரின் காலை உணவு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்க முதல்வரின் ஆய்வுத் திட்ட நிதி உதவி, மாதிரிப்பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலத்தில், உங்களது நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும், ஒழுக்கத்துக்கும் இடையே சம நிலை மிகவும் அவசியம். எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறாது. அதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய வற்றை கைவிடாதீர்கள். எங்கு சென்றாலும், துணிச்சலாக தெளிவாக அன்போடும் அறத்தோடும் செயல்படுங்கள்.
உயர உயரச் செல்லும்போது, கீழே இருப்பவர்களையும் கை தூக்கி விடவேண்டும். இதுதான் உண்மையான தலைமைத்துவ பண்பு. இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளாக நீங்கள் வர வேண்டும். பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் மொத்தம் 197 பேர் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்வில், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், ‘பிம்’ தலைவர் ரவி அப்பாசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் என்.பாலபாஸ்கர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகிருஷ்ணா, முதுகலை துறை தலைவர் ராகவேந்திரா, பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.