2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தபோது சற்று வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்ஷித் ராணா.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, போர்டர்–கவாஸ்கர் டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் ஹர்ஷித் ராணா ஆடவைக்கப்பட்டார்.
இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இந்தியா ஆடிய பெரும்பாலான தொடர்களின் 15 பேர் அணிப் பட்டியலில் இடம்பெற்ற மூன்று–நான்கு வீரர்களில் ஹர்ஷித் ராணாவும் ஒருவர்.

உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களை நிரூபித்த அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்களை 15 பேர் பட்டியலில் கூட தேர்வு செய்யாத நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்திய அணியிலும் பெரிய அளவில் சோபிக்காத ஹர்ஷித் ராணாவை தொடர்ச்சியாக அணியில் தேர்வு செய்வது விமர்சனப் பொருளாகியுள்ளது.
குறிப்பாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இதில் கம்பீரின் தலையீடு அதிகமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.