சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகத் தகவல்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் நாளான நேற்று ஆட்டுச் சந்தை நடந்தது. மேலும் இந்த ஆட்டுச்சந்தையின் போது ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி, சின்னசேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று ஆட்டுச் சந்தையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
வழக்கத்தை விட ஆட்டு சந்தைக்கு கூடுதலான அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் சேலம், தேனி, மதுரை, இராமநாதபுரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்ததால், ஆடுகளை போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினார்கள்.
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இதில் செம்மறி ஆடு, தலைச்சேரி ஆடு, நாட்டினம் உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் ஒரு ஆடு 3500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகையையொட்டி வீரகனூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் கடந்த வாரங்களை காட்டிலும் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டன. கூடுதல் விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.