கோவை: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் களையிழந்ததால், தமிழக பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கேரளத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகையின்போது மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் நல்ல லாபமும் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாது என்று கேரள அரசு அறிவித்திருந்தது. ஓணம் கொண்டாட்டத்தை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, கோவையில் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பிசியான நேரமாகவும் இருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 110 டன் மலர் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு வெறும் 15 டன் மலர் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுளள்து. கடந்த ஆண்டு மாரிகோல்டு பூ ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது, ஆனால் இந்த ஆண்டு 30 கிலோ பூவே ரூ.150 முதல் ரூ.200 வரைதான் விற்பனையாகியிருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளனர் விவசாயிகளும், வியாபாரிகளும்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மலர் விவசாயத்துக்குப் புகழ்பெற்றது. இங்கு பூக்கும் மலர்கள் கேரளம் உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
ஆனால், கேரள மாநில அரசின் முடிவால், தமிழக பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது. பூ விவசாயத்துக்கு செலவிட்ட மூன்றில் ஒரு பங்கு தொகை கூட கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பே, திட்டமிட்டு வாடாமல்லி பூ விளைச்சல் செய்யப்பட்டது. இது ஓணம் பண்டிகையின்போது அதிக தேவை இருக்கும் பூ. ஆனால், இந்த ஆண்டு தேவை குறைந்ததால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.
சிலர், செடிகளிலேயே பூக்களை விட்டுவிட்டு, பறிக்கும் கூலியாவது குறையும் என்று விரக்தி அடைந்திருப்பதகாவும், பறித்த மலரை, சந்தைக்குக் கொண்டு செல்லாமல், வழியிலேயே கொட்டிவிட்டு செல்லும் காட்சிகளும் நடந்துள்ளன. இதனால் வாகனக் கட்டணமாவது மிச்சம் என்று விவசாயிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள், கல்வி மையங்கள் போன்றவை, அரசின் உத்தரவால் ஓணம் கொண்டாடாமல் விட்டுவிட்டதால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.