இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முந்தைய போராட்டத்தின் போது ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், எல்லோருக்கும் வேலை தருவதாக கூறி கூட்டத்தை கலைத்தபின், மீண்டும் ‘ வேலையெல்லாம் ஏதும் இல்லை’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘நூறு நாள் வேலை’ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொண்டு பணிபுரியலாம். அப்படியிருக்க ‘தம் பிள்ளைகளை சேர்ப்போம் காசு வரும்’ என்று யாரும் யோசிக்கவில்லை.
கணவர்களை இழந்த பெண்கள், வயதானவர், கேட்பார் இல்லாதவர்கள் தான் இதில் அதிகம் பணிபுரிகிறார்கள். அவர்களே இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெரிய சம்பளம் என்று ஏதும் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகள் இதுதான், இவ்வளவுதான் என்று சொல்வதை கேட்டு தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த வேலை முடக்கமும், இத்தனை மாத கவன குறைவும் கிராமவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் கோரிக்கை எல்லாம் ஒன்று தான்.
“நாங்கள் ஒன்றும் சம்பளத்தையோ, வேலை நாட்களையோ சேர்த்து கேட்கவில்லை, எங்களுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைத்தான் கேட்கிறோம்! இதற்கு உடனடி தீர்வு வேண்டும்” என்பது தான் அது.
இதுதொடர்ந்து ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் அவர்களிடம் பேசிய போது, ‘அந்த கிராமத்தில் நூறு நாட்களை தாண்டி 108 நாட்களாக வேலை நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வேலைகளை முடக்கினோம். தற்சயமயம் மீண்டும் அனைவருக்கும் முன்போல் வேலைய அமைத்து தர வேண்டிய ஏற்பாடுகள் முடிந்துவிட்டது. நாளை(4.12.2025) அனைவருக்கும் வேலைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.