கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரம் சட்டசபையிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை விசாரணை தேவை என்று கூறி வருகிறார்கள்.
அ.தி.மு.க வெளிநடப்பு
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கலாம் என்று கூறியதை அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
2-வதுநாளாக இன்றும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் அ.தி.மு.கபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிநிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்ககேள்வி நேரத்தை ஒத்திவையுங்கள். மக்கள் உயிர் பறிபோயுள்ளது. இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது பச்சைப் போய். 3 பேர் இறந்தவுடன் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில் வயிற்றுப் போக்கு, வலிப்பு,ஒருவர் வயது மூப்பு காரணமாக இறந்ததாகக் கூறுகிறார். இதனை நம்பி லேசான உபாதைகள் இருந்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உயிர்கள் பறிபோயுள்ளன. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 55 பேர் பலியாகியுள்ளனர். கலெக்டர் உண்மையைச் சொல்லியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோய் இருக்காது.
சி.பி.ஐ. விசாரணை
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனை வலையில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் அரசு அமைக்கும் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இன்றைய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தைப் புறக்கணித்து விட்டு அ.தி.மு.க எம்எல்ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படியுங்கள்: