கழற்றிவிட்ட திமுக; கைகொடுத்த அதிமுக – கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கட்சி மாறியப் பின்னணி! | the former dmk municipal chairman of krishnagiri has joined the admk

Spread the love

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் மதியழகன், 2019-க்குப் பிறகுதான் தி.மு.க-வுக்கே வந்தார். வசதி படைத்தவர் என்பதால், வந்த வேகத்திலேயே மா.செ பதவி, பர்கூர் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி வென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதை விரும்பாத நகரச் செயலாளராக இருந்த எஸ்.கே.நவாப்பும், அவரின் மனைவியும் நகராட்சித் தலைவருமான ஃபரிதா நவாப்பும் மா.செ மதியழகனை எதிர்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாத இறுதியில், ‘நகராட்சி ஆணையரின் அறைச் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்ததாக’ சர்ச்சை வெடித்தது.

`நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப்தான் இந்த வேலையைப் பார்த்திருக்கிறார்’ என்று புரளியைக் கிளப்பி, அவரைச் சிக்கவைத்து விட்டார்கள். தி.மு.க தலைமையும் விசாரிக்காமல், பிப்ரவரி 8-ம் தேதி `ஒழுங்கு நடவடிக்கை’ என்கிற பெயரில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் எஸ்.கே.நவாப்பை நீக்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்...

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்…

அன்றைய தினமே, கிருஷ்ணகிரி நகரத்தை, `கிழக்கு, மேற்கு’ என்று இரண்டாகப் பிரித்து, புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தது தி.மு.க தலைமை. அந்த இரு பொறுப்பாளர்களுமே மதியழகனின் விசுவாசிகள் தான். நகரத்தைக் கைப்பற்றிய மாவட்டச் செயலாளர் மதியழகன், நகராட்சி அலுவலகத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடிவுசெய்தார். அதன்படி, கவுன்சிலர்களும் அவர் சொல்லுக்கு அடங்கிப்போய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தலைவரை காலி செய்துவிட்டார்கள்’’ என்றனர் விரிவாக.

இது குறித்து, 19-11-2025 அன்று தேதியிட்ட ஜூ.வி இதழில், “ `தலைக்கு ரூ.25 லட்சம் பேரம்…’ – நகராட்சியை கபளீகரம் செய்தாரா தி.மு.க மாவட்ட செயலாளர்? கிறுகிறுக்கும் கிருஷ்ணகிரி!” என்ற தலைப்பில் நகர்மன்றத் தலைவரின் கணவர் எஸ்.கே.நவாப், தி.மு.க மா.செ மதியழகன், அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி ஆகியோரின் விளக்கத்துடன் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்த ஃபரிதா நவாப் மற்றும் அவரின் கணவரும் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருமான எஸ்.கே.நவாப் ஆகியோர் டிசம்பர் 15-ம் தேதியான நேற்றைய தினம் சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் செவ்வந்தி இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த தம்பதியுடன் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வைச் சேர்ந்த மேலும் 20 பொறுப்பாளர்களும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். “எஸ்.கே.நவாப் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வின் முகமாக அறியப்பட்டவர். மேலும், ஷாய் மசூதி தலைவர் மற்றும் தர்கா கமிட்டித் தலைவராகவும் தான் சார்ந்த இஸ்லாமிய சமூக மக்களிடமும் செல்வாக்குமிக்கவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தி.மு.க அவரைக் கழற்றிவிட்ட நிலையில், அ.தி.மு.க தாமாக முன்வந்து கைகொடுத்து அரவணைத்திருக்கிறது. சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் முக்கிய பிரமுகர் தனது ஆதரவாளர்களோடு கட்சி மாறியிருப்பது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் கட்டாயம் எதிரொலிக்கும்’’ என்கின்றனர் அரசியலை உற்றுநோக்கும் புள்ளிகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *