திருப்பத்தூர்: “சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கழிப்பறையிலும் ஊழல் செய்திருக்கிறது திமுக” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கினார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இன்று (புதன்கிழமை) மாலை ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பத்தூரில் கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி தற்போதே உறுதியாகிவிட்டது என கூறலாம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி அதை புதிய திட்டமாக அறிவித்து பொதுமக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறது. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவுமே கொண்டுவரவில்லை. வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூரை தனி மாவட்டமாக கொண்டு வந்தது அதிமுக அரசு. ஒரு மாவட்டம் உருவாக ரூ.400 கோடி நிதி ஒதுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியது அதிமுக அரசு. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதை திறந்து வைத்த திமுக, தான் அனைத்தையும் கொண்டு வந்ததை போல பெருமை தேடுகின்றனர்.
திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதால் மேயரின் கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, நெல்லை மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானங்களை கொண்டு வந்துள்ளதே திமுக கவுன்சிலர்கள் தான். அந்த அளவுக்கு இந்த ஆட்சி உள்ளது.
இதுதவிர சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ரூ.800 என ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கழிப்பறையிலும் ஊழல் செய்திருக்கிறது திமுக.
தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது இதேபோல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களுடன் அமர்ந்து தேநீர் சாப்பிட்டு அவர்களுக்கு ஆதரவாக பேசினார். தற்போது தூய்மைப் பணியாளர்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆகவே, மக்களை ஏமாற்றுவது திமுகவினருக்கு கை வந்த கலை. உடல் உறுப்புகளை திருடும் கும்பல் திமுக. அக்கட்சியினர் நடத்தும் மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம்.
கிட்னி திருடிவிடுவார்கள். திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மருத்துவக் குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா? தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இவ்வளவு ஏன்… காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் காவல் துறை செயலிழந்து விட்டது. நம்மை நாமே தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது.
தமிழகத்தில் 6 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில், ஒரு மதுபாட்டில் மீது ரூ.10 கூடுதல் விலை வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ.15 கோடி வரை ஊழல் நடைபெறுகிறது. அப்படி பார்த்தால் மாதத்துக்கு ரூ.450 கோடி, ஆண்டுக்கு ரூ.5,400 கோடி என கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் ஆட்சி இனி தமிழகத்துக்கு தேவையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் திமுக அரசு ரத்து செய்துள்ளது. 2026 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட பெரிய பதவிகளுக்கு வரலாம். திமுகவில் அப்படி இல்லை. அங்கு குடும்ப வாரிசுகளுக்கு தான் முக்கிய பதவிகள் வழங்கப்படும். அப்பா அமைச்சராக இருப்பார் மகன் எம்எல்ஏவாகவோ அல்லது எம்பியாகவோ இருப்பார். இதுதான் திமுக.
திமுகவில் மூத்த அமைச்சராக உள்ள துரைமுருகன் அதிக நாட்கள் சட்டப்பேரவையில் இருந்தவர். மிசாவில் கைதாகி சிறைக்கு சென்ற அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்க்கின்றனர். அடுத்து இன்ப நிதிக்கு பதவி கொடுப்பார்கள். இது போன்ற குடும்ப ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகளை மூடியது திமுக அரசு. இத்தகைய ஊழல் மிகுந்த திமுக ஆட்சியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பத்தூரை தொடர்ந்து, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பேசினார்.