சிவகங்கை: “கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வேலுநாச்சியார் மணிமண்டப வளாத்தில் விடுதலை போராட்ட வீரர் குயிலி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (அக்.12) மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் என்ன தவறு இருக்கிறது?. தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியை விடுவித்தது. சமீபத்தில் மாநிலத்துக்கான பங்கு நிதியையும் மத்திய நிதியமைச்சர் விடுவித்துள்ளது.
மத்திய அரசின் சந்தேகங்களுக்கு தமிழக அரசு பதிலளித்ததும் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும். உதயநிதி துணை முதல்வர் ஆனதால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.” என்று கூறினார். இந்த சந்திப்பின்போது, பாஜக மாவட்டத் தலைவர் சந்தியநாதன், நகர் தலைவர் உதயா அகியோர் உடனிருந்தனர்.