கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்பு பணி நிறைவு; சீரமைப்பு பணி தீவிரம் | Kavaraipettai train accident Railway track restoration work in process

1324679.jpg
Spread the love

சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் ரயில் மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மீண்டும் தர்பங்காவுக்கு மாற்று ரயில் மூலம் புறப்பட்டுள்ளனர். அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.

விபத்து ஏற்பட்ட இடத்தில் ரயில் பாதை மோசமாக சேதமடைந்துள்ளது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளது. அதனை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பேட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உள்ள காரணத்தால் வெல்டிங் செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எப்படியும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைய சுமார் 15 மணி நேரத்துக்கு மேலாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த பாதையில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

நடந்தது என்ன? திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 19 பேர் காயமடைந்தனர். மீட்பு பணியில் திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் சென்றபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது. இதில் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், சுமார் 19 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவும் அங்கு தயாராக இருந்தது.

மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில்களில் யாரேனும் சிக்கி இருக்கிறார்கள் என தேடுதல் பணி நடைபெற்றது. விபத்து நடைபெற்ற இடத்துக்கு அக்கம்பக்கத்தில் உள்ள ஊர் மக்கள் பயணிகளுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றை வழங்கி இருந்தனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம்: இந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, கிளை பாதையில் (லூப் லைனில்) சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளனதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *