கவின் கொலை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்: நீதிபதிகளிடம் முறையீடு | Request for the High Court to monitor the investigation into the Kavin murder case

1371870
Spread the love

மதுரை: நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேணடும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் தகனம் செய்தனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில், கவின் கொலை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் பினேகாஸ், செல்வகுமார் ஆகியோர் ஆஜராகி, “நெல்லையில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தற்போது கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். விசாரணையை முழுமையாக உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மனுதாரர்கள் கோரிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *