திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
கவின் ஆணவக் கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருச்சி ஆட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். சிவா கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, கே. கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவா்கள் மீதான வழக்குகளை உடனடியாக நடத்தி தீா்ப்பு வழங்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நாட்டில் சாதியும், சாதி வெறியும் ஒழிய வேண்டும். மேலும் சாதி வெறிக்கு எதிராக, பள்ளி-கல்லூரிகளில் ஆணவப் படுகொலைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆட்சி அதிகாரம் தங்களுக்கு துணை நிற்கும் என்ற துணிவுடன் ஆணவக் கொலைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவ படுகொலைகள் நடந்தன. இது தொடா்பாக அப்போது இருந்த அரசு, நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போதும் இது தொடா்கதையாக உள்ளது.