தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.
மேலும், பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எவ்வாறு தோல்வி அடைந்தாா் என்பதை ராகுல் காந்தி தெளிவாக விளக்கியுள்ளாா். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதால், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அரசு முடிவு செய்தது என்றாா்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் “வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை “தயார் செய்யவும், திருத்தவும், தேவைப்பட்டால் மீண்டும் திருத்தவும்” மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்கான சான்றுகளை வெளியிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.