‘கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்’ என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதை தொடர்ந்து, “முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுகிறார்’ என்று செய்தி பரவியவுடன் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கும் காலம் கனிந்து வருவதாக அவரது ஆதரவாளர்களும், அவர் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கருதினர்.
கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, மூன்று நாட்கள் முகாமிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியது தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. கடைசியில், முதல்வர் பதவி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும், முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி பாஜக, மஜத கட்சிகளில்கூட இன்னும் ஓயவில்லை.
மாற்றம் எளிதல்ல: கர்நாடக அரசியலில் சித்தராமையா, 2023-இல் போட்டிக்கு நின்ற டி.கே.சிவகுமாரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல்வரானவர். அதற்கு காரணம்: அவர் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்லாது, லிங்காயத்து, ஒக்கலிகர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் பெற்றிருப்பதுதான்.
தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஆதரவைப் பெற ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு’ உள்ளிட்ட பிரச்னைகளை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ், அதற்காகவே சித்தராமையாவை முதல்வராகத் தொடரச் செய்கிறது.