காங்கிரஸை `போனால் போங்கள்’ என்ற உத்தவ், இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்! – மும்பை தேர்தல் களேபரம்! | Congress refuses to form an alliance in the Mumbai municipal elections: Uddhav seeks Rahul Gandhi’s help

Spread the love

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மும்பைதான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சி ஒரு நேரத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக போராட்டம், தாக்குதல் நடத்தியது. இதனால் அக்கட்சி கூட்டணியில் இருந்தால் நாங்கள் கூட்டணிக்கு வரமாட்டோம் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதற்கு கட்சி தலைமையும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. உத்தவ் தாக்கரேயும் தங்களது கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறிவிட்டார்.

ராகுல் காந்தி, சஞ்சய் ராவுத்

ராகுல் காந்தி, சஞ்சய் ராவுத்

மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். எனவே தான் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்து இருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே தற்போது உறுதியாக இருக்கிறார். இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத்தை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார். அவர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணியின் அவசியம் குறித்து ராகுல் காந்தியிடம் எடுத்து கூறி இருக்கிறார்.

இதே சஞ்சய் ராவுத்தான், முன்பு, `கூட்டணிக்கு வர விரும்புபவர்கள் வரலாம். வரவில்லையென்றால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது நாம் இணைந்து போட்டியிட்டால்தான் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும் என்று சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா நகராட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்று இருப்பதால், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த காங்கிரஸ் கட்சியின் துணை தேவை என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *