அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது:
”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் இரட்டை போனஸ் அளிப்பேன் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்.
தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிமையாகிவிட்டது. செப்டம்பர் 22, நவராத்திரியின் முதல் நாள் அன்று சீர்திருத்தம் செயல்படுத்தப்படும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டபோது, பல தசாப்தங்களின் கனவு நனவாகியது. மோடி பிரதமரான பிறகு இந்த விவாதம் தொடங்கவில்லை. இந்த விவாதங்கள் முன்பும் நடந்தன, ஆனால் எந்த வேலையும் செய்யப்படவில்லை.
இளைஞர்களுக்காக ஜிம், சலூன், யோகா போன்ற சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு உங்களின் மாதாந்திர செலவை அதிகப்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுக்குகூட 21 சதவிகிதம் வரி விதித்தார்கள். இதை மோடி செய்திருந்தால், எனது முடியைப் பிடிங்கியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.