கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இயற்கை துறைமுக தொகுதி என்ற சிறப்பை பெற்ற குளச்சலில் தி.மு.க ஒருமுறையும், அ.தி.மு.க 2 முறையும் வென்றுள்ளன. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றிப்பெற்ற தொகுதியாகும்.
2006-ல் ஜெயபால் எம்.எல்.ஏ-யாக இருந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். பின்னர் மேலிடத்தில் நடந்த சில காய்நகர்த்தல்களைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராபர்ட் புரூஸ் மாற்றப்பட்டு பிரின்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் இருந்து தொடர்ச்சியாக பிரின்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்று வருகிறார்.
கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் கட்சி வாக்குகள் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துவருகிறது. மேலும், தி.மு.க உடனான கூட்டணி பலத்தாலும் காங்கிரஸ் அந்த தொகுதியில் வென்று வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் நான்காவது முறையாக போட்டியிட தயாராகி வருகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அதே சமயம் மூன்றுமுறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ ஆனதால் இம்முறை பிரின்சுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.