”காங்கிரஸ் குடும்ப அரசியலுக்கு எதிராக இபிஎஸ் குரல் எழுப்புவாரா?” – பொன். ராதாகிருஷ்ணன் | Pon.Radhakrishnan talks on EPS

1334641.jpg
Spread the love

மதுரை: “திமுகவின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசுவாரா?” என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தியும் அவரது குழந்தைகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?

குடும்ப அரசியல் கேவலமான நிலையாகும். ஒரு குடும்பத்தை விட்டால் கதியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ், திமுக தள்ளப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் குடும்ப அரசியல் செய்கின்றன. பாஜக ஒருபோதும் குடும்ப அரசியல் செய்யாது. இதற்கு வரும் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.

ஒரு தேர்தலையும் சந்திக்காக நடிகர் விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு எவ்வளவு செலவாகிறது. இதை குறைப்பது தேசிய கடமை. இதற்காகவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.

தமிழகத்தில் திமுக அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் கலைஞர், பெரியார் பெயர்களை விட்டு ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்களா? ஏன் அவர்களால் வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. தேவர் நினைவிடத்திற்கு சென்று வழிபட்டால் போதாது. நாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேவரின் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக விஜய் பேசியுள்ளார். இதை கட்சிகள் வரவேற்கலாம். மக்கள் மத்தியில் உடனடி வரவேற்பு கிடைக்காது.

கூட்டணியில் இருந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். அந்த மனநிலையில் திமுக இல்லை. பிற கட்சிகள் அந்த மனநிலையில் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் பாஜக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. நடிகர் விஜய் கூறியதில் தமிழக தலைமை செயலகத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என்பதை ஏற்கலாம். மதுரை தமிழின் தலைநகரம். அரசியலின் தலைநகரம் சென்னை அல்ல. மதுரை தான். தமிழக சட்டப்பேரவை வளாகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என அடுத்த தேர்தலி்ல் குரல் கொடுப்போம்” என்று அவர் கூறினார். பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *