புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன்.
வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது.
மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது.
தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும்.
புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது.