காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது

Dinamani2f2024 062f055c83bc 14c8 42c4 88f2 3ed0bf4fef9a2fcongress Flag.jpg
Spread the love

மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது.

1924, டிச. 26, 27 ஆம் தேதிகளில் கர்நாடக மாநிலம், பெலகாவியில் மகாத்மா காந்தி தலைமையில் 39-ஆவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு இதுவாகும். மாநாட்டுக்கு கங்காதர் ராவ் தேஷ்பாண்டே என்பவர்தான் ஏற்பாடு செய்தார்.

சுதந்திரப் போராட்டத்தை பெலகாவியில் முன்னெடுத்தவரும் இவர்தான். இந்த மாநாட்டில் 70,000 பேர் பங்கேற்றனர்.

மாநாட்டில் மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ்சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அன்னிபெசன்ட், செüகத் அலி, சைபுதீன் கிட்ச்லேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின்போது சுதந்திரப் போராளிகள் அனைவரும் காதி நோற்க வேண்டும், ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்தார்.

பெலகாவியில் உள்ள திலக்வாடியில்தான் இந்த மாநாடு அப்போது நடைபெற்றது.

இந்த மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு இதை விழாவாகக் கொண்டாட கர்நாடக காங்கிரஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி பெலகாவியில் டிச. 26, 27ஆம் தேதி என இரண்டு நாள்கள் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.

முதல் நாளான டிச. 26 -இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டமும், டிச. 27-இல் காங்கிரஸ் மாநாட்டு பொதுக் கூட்டமும் நடைபெறுகின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: 1924-இல் நடைபெற்ற 39 -ஆவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை திரட்டியுள்ளோம். அதை மீண்டும் வெளியிடவுள்ளோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *