காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Dinamani2f2024 12 142fm4ut1b2b2fpti12142024rpt326b.jpg
Spread the love

அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, “நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் 75 ஆவது ஆண்டு விழா, உலக ஜனநாயகங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். அரசியல் அமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது, இந்தியாதான். பெண்களின் பங்களிப்பே அரசமைப்பை வலுப்படுத்துகிறது.

இதுவரையில் கொண்டு வரப்பட்ட அனைத்து முக்கியத் திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளன. 100 ஆவது சுதந்திர தின விழாவின்போது, வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். விரைவில் உலகின் 3 ஆவது பொருளாதாரமாகவும் இந்தியா மாறும். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒற்றுமை அவசியம்; மின் விநியோகத்துக்குகூட நாடு முழுவதும் ஒரே வழித்தடத் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. 75 ஆண்டுகால சாதனை அசாதாரணமானது. கோடிக்கணக்கான இந்தியர்கள் முன் தலைவணங்கக் விரும்புகிறேன்.

நாட்டின் ஒற்றுமைக்காகவே 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஆனால், இந்தத் தருணத்தில் பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளில் 50 முறை அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியமைத்துள்ளது. காலனிய ஆதிக்க மனநிலையில்தான் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு விமோசனமே இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள், அவசர நிலை மூலம் நாட்டையே சிறைபோல மாற்றினர். மேலும், அரசியலமைப்பை அவமதிப்பதும் புறக்கணிப்பதும் காந்தி குடும்பத்துக்கு பழக்கமாகிவிட்டது.

பிரதமர் மோடி

காங்கிரஸ் குடும்பம்தான் அரசியல் சாசனத்தைக் களங்கப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பம்தான் ஆக்கிரமித்துள்ளது; கட்சி சாசனத்தையே அவர்கள் மதிப்பதில்லை. அரசமைப்பு தொடர்பாக அவையில் சுமூகமான விவாதம் நடைபெற்றிருந்தால், இளைய தலைமுறையினர் பயன் பெற்றிருப்பர்.

நமது பாதையில் அரசமைப்பு குறுக்கிட்டால், அதனை மாற்ற வேண்டும் என்று நேரு குறிப்பிட்டார். இருப்பினும், அப்போதைய குடியரசுத் தலைவரும் அவைத் தலைவரும் நேருவை சரியான பாதையில் வழிகாட்ட முயற்சித்தனர். 1996 ஆம் ஆண்டில், ஒரே ஒரு வாக்கில் பெரும்பான்மையை இழந்த வாஜ்பாய் அரசு, அரசமைப்புக்கு முரணான வழிகளை நாடாமல் ராஜிநாமா செய்தது, அரசியலமைப்பு மீதான மரியாதையைக் காட்டுகிறது. ஆனால், வாக்குகளுக்கு பணம் கொடுத்த பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் அரசு காப்பாற்றப்பட்டது.

மதவாதிகளின் அழுத்தத்தால், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, புதிய சட்டத்தை ராஜீவ் காந்தி இயற்றினார்.

நேரு விதைத்த விஷ விதைக்கு இந்திரா காந்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அவரது பதவியைப் பறித்ததால், அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவியைக் காப்பாற்றவே அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் அனுமதிக்கவில்லை.

பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்து மாநில முதல்வர்களுக்கு நேரு பல கடிதங்களை எழுதினார். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உறுதியளிப்பதன் மூலம் தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த காங்கிரஸ் புதிய விளையாட்டை விளையாடுகிறது.

அதுமட்டுமின்றி, அண்ணல் அம்பேத்கருக்கு நாக்பூரில் நினைவிடம் அமைக்க வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. ஆனால், 10 ஆண்டுகால மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கர் நினைவிடம் கிடப்பிலே போடப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் கிடப்பில் போட்ட அம்பேத்கர் நினைவிடத்தை பாஜக ஆட்சியில்தான் நிறுவினோம்’’ என்று கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: இந்திய விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *