ஸ்ரீவைகுண்டம்
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது.
அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், “இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர்.