முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வட கிவூ மாகாணத்தின் தலைநகர் கோமாவை கைப்பற்றிய எம்23 கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர், தெற்கு கிவூ மாகாணத்தின் கவுமு விமான நிலையத்தை குறிக்கோளாகக் கொண்டு முன்னேறி வந்த அவர்கள் இன்று (பிப்.14) அதனைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
காங்கோவின் கனிம வளம் அதிகமுள்ள கிழக்கு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் மிக முக்கியமான எம்23 (M23) கிளர்ச்சியாளர்கள்,தெற்கு கிவு மாகாணத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.
தொடர்ச்சியாக, கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்களினால் தற்போது வரை 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடமாற்றப்பட்டுள்ளதாக ஐநா ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.