பாராளுமன்ற தேர்தலில் இன்று 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்யை கைப்பற்றும்.
பா.ஜனதாக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடி 3வது முறையாக இந்த தடவையும் பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இதேபோல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் ஆட்சியை தாங்கள் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
காங்.கூட்டணி ஆலோசனைகூட்டம்
இன்று கடைசிகட்ட தேர்தல் முடிந்து உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே தலைமையில் டெல்லில் உள்ள அவரது வீட்டில் இன்று(1ந்தேதி) மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ்யாதவ், தேஜஸ்யாதவ், டி.ஆர்.பாலு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்றதேர்தல் முடிவுகள் வந்ததும் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.
தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
போலி பிம்பம் உடைப்பு
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
புதிய விடியலுக்கான தொடக்கம்
ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.
பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்:உடல்நிலை: மோடிக்கு நவீன் பட்நாயக் காட்டமான பதில்