காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் 250 பேர் இன்று (அக்டோபர் 9-ம் தேதி) கைது செய்யப்பட்டனர்.
தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் அவர்கள் அமைத்திருந்த பந்தல்களை போலீஸார் பிரித்தனர். மேலும் போராடும் இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திறந்த வெளியில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின்போது இரு ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரித்தனர். போலீஸார் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நேரத்தில் மழை வந்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்தது. இதனைத்தொடர்ந்து சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், செயலர் முத்துக்குமார் உள்பட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.