திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை உணர்ந்தார்.
அப்போதுமுதல் திருமுக்கூடல் திருப்பதிக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தில் பக்தியால் பக்தர்கள் அனைவரும் வேங்கடவனைத் தந்தையாகப் பாவித்து வழிபட்டார்கள். அதனால் பல்லவ மன்னரும் திருமுக்கூடல் பெருமானை ‘அப்பன்’ என்று அழைக்க அதுவே அவர் திருப்பெயர் முன் சேர்ந்துகொண்டது.

இத்தலத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை பல்லவர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். கல்வெட்டுகளிலிருந்து ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்கடேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் இந்த இறைவன் வணங்கப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது.
மேலும் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருப்பதி வேங்கடவனே என்பதால் இங்கு வந்து பெருமாளைச் சேவித்தால் திருப்பதி ஏழுமலையானைச் சேவித்த பலன் கிடைக்கும்.
மாட்டுப்பொங்கல் அன்று மகத்தான உற்சவம்
தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்குச் சேவை சாதிப்பா்.
பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்வர்.