சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் – புத்தகரம் அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வசிக்கும் காலனியை சேர்ந்த எங்களை அனுமதிப்பதில்லை. அரசு தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும் பிற சாதிகளை சேர்ந்த ராஜ்குமார், பாண்டுரங்கன், சரவணன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செயல்படுகின்றனர்.
தீபாராதனையின்போது மட்டும் கோயிலுக்கு வெளியிலிருந்து மட்டுமே தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தேர்த் திருவிழாவின் தேரோட்டம், வெள்ளோட்டம் ஆகியவற்றின் போதும் காலனி வரை தேர் வரவிடாமல் தடுக்கப்படுகிறது’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பார்வேந்தன், கோயிலுக்குள் செல்லவும், பூஜைகள் செய்யவும், தேர் வெள்ளோட்டத்தின்போது காலனி வரை தேர் வருவதற்கும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், பாகுபாடு ஏதும் காட்டப்படவில்லை என்றும், சாலை வசதி குறைபாடு காரணமாகவே வெள்ளோட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறி, தேரோட்ட வழித்தடத்துடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், மனுதாரர் உள்ளிட்ட அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், தேரின் வெள்ளோட்ட பாதையை ஆய்வு செய்து அறிக்கை மற்றும் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி பி.பி.பாலாஜி, முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் காலனியை சேர்ந்தவர்கள் செல்வதற்கு என்ற தடையும் இல்லை என உத்தரவிட்டார். எவருக்கும் எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறிஞர் ஆர் திருமூர்த்தி ஆஜராகி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தான் தலைவர் என்றும், அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், குடிமக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டார். காலனி வழியாக தேர் செல்வதற்கான அரசின் அறிக்கையின்படி, வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.