காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய்விட்டதாக பக்தர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காஞ்சி வரதராஜர் கோயிலில், பக்தர்களால் தோஷ நிவர்த்திக்காகத் தொட்டு வணங்கப்படும் புகழ்பெற்ற ‘தங்கப் பல்லி’ மாயமாகிவிட்டதாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பக்தர் சமீபத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், பல்லி இருந்த இடத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், தெற்குப் பகுதியில் பல்லி தரிசனம் இடமாற்றம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திவிட்டுச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்துக் கோயில் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் அளித்த விளக்கம்: பக்தர்களிடையே ‘தங்கப் பல்லி’ என்று அழைக்கப்படுவது உண்மையில் பித்தளையால் செய்யப்பட்ட பல்லிச்சிற்பம்தான். பித்தளைப் பல்லி, வெள்ளிப் பல்லி, சூரியன், சந்திரன், சக்கரம் ஆகியவை சேர்ந்தது ஒரு செட் ஆகும்.

கோயிலில் இதுபோல் மொத்தம் மூன்று செட்கள் உள்ளன. இதில் ஒருசெட் நூற்றாண்டுக்கும் மேல் பழமையானது. ஆனால் அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால் தற்போது பயன்பாட்டில் இல்லை. தற்போது பயன்பாட்டில் இருப்பது, 1970-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அளிக்கப்பட்ட செட் ஆகும்.
இதுவும் காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, 2012-ம் ஆண்டு ஒரு பக்தர் நன்கொடையாக அளித்த புதிய செட்டை வைப்பதா? என்று தான் கோயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனையே செய்யப்பட்டது. பல்லிச் சிற்பங்கள் மாற்றப்படவில்லை.
பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் பல்லிச் சிற்பங்கள் பழைய இடத்திலேயே மீண்டும் வைக்கப்படும். புகார் எழுந்ததையடுத்து, எங்களிடம் இருக்கும் பல்லிச் சிற்பங்களை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினரிடம் காட்டி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம் என்றார்.
இதுதொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, “காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப் பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். இதுகுறித்த விளக்கத்தை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அறிக்கையாக அளிப்பார்” என்றார்.