கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.
கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் தபால் பட்டுவடா செய்யும் பணியில் உள்ளார்.
வழக்கம்போல நேற்று(ஏப். 22) பணி முடித்து மாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் திடீரென வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று சாலைக்கு வந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த இவர்களை விரட்டியுள்ளது. அப்போது குமார் தனது இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு மனைவியையும் இழுத்துக் கொண்டு ஓடியபோது சாலையில் தடுமாறி கீழே விழுந்த சரஸ்வதியை யானை தாக்கியுள்ளது.