காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தளங்களில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்  – Kumudam

Spread the love

காணும் பொங்கலையொட்டி  தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மெரினா, பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரைகளில்  12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு திரண்டு இருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரியை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்தனர். 

16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி 

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டியில் அலை மோதும் கூட்டம் 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

இதே போன்று, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அலைமோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *