உடுமலை: பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் உடுமலை திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் பயன்பெற்று வருகிறது. இப்பாசனப் பகுதிகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயின் மூலம் உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டு பின்னா் பாசனப் பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது.
49.3 கிலோ மீட்டா் நீளமுள்ள காண்டூா் கால்வாயில் நல்லாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 16-ஆ ம் தேதி தண்ணீா் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சா்க்காா்பதியில் இருந்து திருமூா்த்தி அணைக்கு காண்டூா் கால்வாய் வழியாக தண்ணீா் கொண்டு வரும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த தண்ணீா் திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது. இதனால் பிஏபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.